ஓபிஎஸ் ஷாக்..! இன்று திமுகவில் இணையும் ஓபிஎஸ் அணியின் மூத்த நிர்வாகிகள்..!
அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக செயல்பட்ட வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதன் பின்னர் ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவர்களாக இருவரும் உள்ளனர்.
அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பான பாஜகவின் முயற்சிகளும் தோல்வி அடைந்தன.
இந்நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெறுவதா? திமுக அணியில் இடம் பெறுவதா? தனிக் கட்சி தொடங்குவதா? என்பதில் ஓபிஎஸ் அணி குழப்பத்தில் இருந்து வருகிறது.
இதனால் ஓபிஎஸ் அணியில் அதிருப்தி அடைந்த அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர், அவர் தமது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் அணியின் முன்னாள் எம்.எல்.ஏ. பழனி சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகரன் அண்மையில் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார்.
மேலும் ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் திமுகவில் இணைய இருப்பதாக நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஜனவரி 3-ந் தேதி பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, வெல்லமண்டி நடராஜன் இருவரும் நாளை ஜனவரி 21-ந் தேதி சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஓபிஎஸ் அணியில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஐயப்பன் ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இவர்களில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கம் நாளை திமுகவில் இணைகிறார். இதனால் ஓபிஎஸ் அணியில் அவரையும் சேர்த்து மொத்தம் 2 பேர் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள்.