×

"நாங்கள் யாரையும் கைவிட மாட்டோம்"  - தங்கமணிக்கு ஆதரவாக குரல் கொடுத்த  ஓபிஎஸ் - ஈபிஎஸ் 

 

அதிமுகவும், நாங்களும் யாரையும் கைவிட மாட்டோம்; சோதனையான நேரத்தில் தோளாடு தோளாக நிற்போம் என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் இன்று காலை 6.30  மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ,கரூர் ,சேலம் உள்ளிட்ட 69  இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.  தங்கமணி 2016 முதல் 2020 மார்ச் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அதை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்களது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தங்கமணி ,அவரது மனைவி சாந்தி ,மகன் தரணிதரன் ஆகியோர் மீது நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் லஞ்ச ஒழிப்பு துறையினரால் சோதனைக்குள்ளாகும்  ஐந்தாவது அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தங்கமணி வீட்டில் நடைபெறும் ரெய்டு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ,  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு  தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. அம்மா வெற்றிபெறாத வழக்குகளா?; அவரது வழியில் வழக்குகளை சட்டப்படி சந்தித்து வெற்றிபெற்று பீனிக்ஸ் பறவையாக, நீரில் மிதக்கும் மேகங்களாக மீண்டு வருவோம். திமுக தொடர்ந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்போம். அதிமுகவும், நாங்களும் யாரையும் கைவிட மாட்டோம்; சோதனையான நேரத்தில் தோளாடு தோளாக நிற்போம் என்று குறிப்பிட்டுள்ளனர்.