×

போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்..!

 

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தற்போது இக்கோயிலில் மஹா கும்பாபிஷேகத்தை நடத்தும் பொருட்டு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 07) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்தார். பின்னர், நெய் விளக்கை ஏற்றி முருகப்பெருமானை மனமுருகப் பிரார்த்தனை செய்தார். அப்போது அவருக்கு கோயிலின் குருக்கள் பரிவட்டம் கட்டியதுடன், ஏலக்காய் மாலையை அணிவித்து மரியாதைச் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, திருக்கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் குறித்து திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் முத்துராஜபாண்டியர் மற்றும் குருக்கள் உள்ளிட்டோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, புனரமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தவர், மஹா கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாடுகளை சிறப்பாக செய்யுமாறு அறிவுறுத்தினார்.

வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடத்த விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக இக்கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.