×

வெளியான கருத்துக்கணிப்பு : தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்..? 

 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தமிழகத்தில் வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக + பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துகணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், சிஎன் என் நியூஸ் 18 கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கருத்துக் கணிப்பில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்போதைய மாநில அரசின் ஒட்டுமொத்த செயல்பாட்டை எவ்வாறு மதிப்பிடுவீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு மிகவும் நன்றாக இருந்ததாக 32.7% பேரும், நன்றாக இருந்தது என 7.4% பேரும், சராசரி என 12.3% பேரும், மோசம் என 18.9% பேரும், மிகவும் மோசம் என 20.1% பேரும், கருத்தில்லை என 8.6% பேரும் தெரிவித்துள்ளனர்.

2026ல் யாரை முதலமைச்சராக்க விரும்புகிறீர்கள் எனும் கேள்விக்கு 39.9% பேர் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், 37.5% பேர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், 14.7% பேர் தவெக தலைவர் விஜய்யையும் தேர்வு செய்துள்ளனர்.

மிக முக்கியமான பிரச்சினையாக எது இருக்கிறது எனும் கேள்விக்கு 15.5% பேர் வேலைவாய்ப்பின்மை என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என 17.3% பேரும், 17.8% பேர் பெண்கள் பாதுகாப்பு, 20.1% பேர் மது மற்றும் போதை, 5.2% பேர் வளர்ச்சி இல்லாதது பிரச்சினை என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் போட்டி எவ்வாறு அமையும்?" எனும் கேள்விக்கு 41.2% பேர் முழுமையாக இருமுனை என்றும், 12.6% பேர் ஓரளவு இருமுனை என்றும், 18.7% பேர் மூன்று முனை போட்டியாக இருக்கும் என்றும், 12% பேர் முழு மூன்று முனை போட்டியே என்றும், 15.6% பேர் கருத்தில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் யாருடைய பதவிக்காலம் சிறந்தது? எனும் கேள்விக்கு 2021 முதல் தற்போது வரையிலான மு.க. ஸ்டாலினின் பதவிக் காலம் சிறந்தது என 40.6% பேரும், 2016 முதல் 2021 வரையிலான ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் பதவிக் காலம் சிறந்தது என 44.6% பேரும், இருவரும் சமம் என 4% பேரும் தெரிவித்துள்ளனர். மேலும், யாருமில்லை என 7.9% பேரும், கருத்தில்லை என 2.8% பேரும் தெரிவித்துள்ளனர்.

2026ல் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைக்கும்?" எனும் கேள்விக்கு 40.1% திமுக தலைமையிலான கூட்டணி என்றும், 38.1% அதிமுக தலைமையிலான கூட்டணி என்றும், 14.8% பேர் தவெகவுக்கும், 2.7% பேர் நாதகவுக்கும் வாக்குகள் கிடைக்கும் எனவும், பிற என 1.6% பேரும், இன்னும் முடிவு செய்யவில்லை அல்லது கருத்தில்லை என 3.1% பேரும் தெரிவித்துள்ளனர்.

தொகுதிகளைப் பொறுத்தவரை 113 முதல் 123 தொகுதிகள் வரை திமுக கூட்டணியும், 106 முதல் 116 தொகுதிகள் வரை அதிமுக கூட்டணியும், 2 முதல் 8 தொகுதிகள் வரை தவெகவும் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

234 தொகுதிகளிலும் விஜய் கட்சி தனித்து போட்டியிட தயாராகி வரும் நிலையில், அந்த கட்சிக்கு 10 க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக+ 40.1 சதவீதம், அதிமுக+ 38.1சதவீதம், தவெகவுக்கு 14.8சதவீதம் வாக்குகள் கிடைக்கும். என கணிக்கப்பட்டுள்ளது.