×

ஊட்டி மலை ரயில் சேவை நவ.30 வரை ரத்து!

 

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ள,  100 ஆண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினந்தோறும்  இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ளூர் வாசிகள் மட்டுமன்றி வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பயணம் செய்வது வழக்கம். 

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகையை நோக்கி மலை ரயில் புறப்பட்ட நிலையில், பல்சக்கரம் இருப்பு பாதையின் மீது மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் ,மலை ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது.  இதையடுத்து மண்சரிவை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து மலை ரயில் தண்டவாள பாதையில் பெரிய அளவிலான பாறைகள் உருண்டு விழுந்தது. இது  வெடிவைத்து அகற்றப்பட்ட நிலையில், சேதமடைந்து இருப்புப் பாதைகள் புதிதாக மாற்றப்பட்டன. இதனால் நேற்று வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.


இந்நிலையில் கனமழை தொடர்ந்து உதகை மண்டலத்தில் பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை நவம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.