"விஜய் படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்"- ஆனந்த் உத்தரவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினை எதிர்த்து தேர்தல் களத்தில் களமிறங்க உள்ளது தமிழக வெற்றிக் கழகம். நடிகராக வலம் வரும் விஜய் முழுநேர அரசியல்வாதியாக எப்போது களமாடுவார் என அவரது ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் காத்திருக்கின்றனர். மாநாடு, கொள்கை விளக்க கூட்டம் என கட்சியின் அடுத்தடுத்த வேலைகளில் தவெக ஈடுபட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், திமுக,அதிமுக, தேமுதிக ,பாமக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், விஜயின் தமிழக வெற்றி கழகமும் களத்தில் இறங்கி மக்களை நேரடியாக சந்தித்து வருகிறது. திமுக உறுப்பினர் சேர்க்கையான ஓரணியில் தமிழ்நாடு-க்கு போட்டியாக வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஸ்க்கர் ஒட்டி உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுவருகின்றனர். அந்த ஸ்டிக்கரில் “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்” என்ற வாசகமும், அதில் விஜய் மற்றும் ஆனந்த் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் பிரசாரத்தில் விஜய் புகைப்படம் உள்ள ஸ்டிக்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தனது புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட பழைய ஸ்டிக்கர்களை கிழித்துவிட்டு, விஜய் மட்டுமே இருக்கும் புதிய ஸ்டிக்கரை ஒட்டும் பணியில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.