×

பக்தர்கள் கவனத்திற்கு..! உடல் தகுதியுடன் இருக்கும் பக்தர்கள் மட்டுமே வெள்ளியங்கிரி மலையேற அனுமதி..!

 

வெள்ளியங்கிரி மலை அடர்ந்த வனப்பகுதி வழியாகவும், மலைமீதும் நடந்து செல்ல வேண்டும் என்பதால், காலநிலை காரணமாக குளிர்காலத்தில் செல்ல அனுமதி அளிப்பது இல்லை. மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதத்தில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவு காரணமாக தற்போது பிப்ரவரி மாதம் 1-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.


இது குறித்து கோவை மாவட்ட வன அதிகாரி கூறியதாவது:-

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லக் கூடாது. பக்தர்களின் வசதிக்காக வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருக்கும். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, உடல் தகுதியுடன் இருக்கும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

 

3, 6 மற்றும் 7-வது மலையில் மருத்துவ முகாம் அமைக்கப்படும். அதில் மருத்துவ ஊழியர்களுடன் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள். வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அடிவாரத்தில் தயாராக இருப்பார்கள். அத்துடன் 8 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினர் மலை மீது ரோந்து பணியில் ஈடுபட்டு வருவார்கள்.


மலை மீது செல்லும் பக்தர்கள் யாரும் போதைப்பொருட்கள் கண்டிப்பாக உபயோகிக்கக்கூடாது. அதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களை எக்காரணத்தை கொண்டும் எடுத்துச் செல்லக்கூடாது. இதை அடிவாரத்தில் இருந்து கண்காணித்து, பிஸ்கெட் போன்ற பொருட்கள் கொண்டு வரும்போது அதில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை அப்புறப்படுத்தி காகிதத்தில் வைத்து கொடுக்கப்படும்.


கடந்த ஆண்டில் மலையேறிய 9 பேர் உயிரிழந்தனர். எனவே தற்போது உயிரிழப்பை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மலையேறும் பக்தர்கள் மிகவும் பாதுகாப்புடன் சென்று திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.