×

கல்லூரிகளில் இனி நேரடி வகுப்புகள் மட்டுமே- உயர்கல்வித்துறை

 

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என அறிவித்ததால் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர்கள் நேரடி தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சங்கம்  உட்பட 11 மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை தலைமைச் செயலகத்தில்  சந்தித்து, ஜனவரி 20ஆம் தேதி முதல் அனைத்து வகை செமஸ்டர் தேர்வுகளும் நேரடித் தேர்வு நடத்த ஒப்புதல் தெரிவித்தனர். 

இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்தவும், ஜனவரி 20 ஆம் தேதி முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்குமுன் மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.