×

#Breaking தமிழில் 2 பேர் மட்டுமே 100 மதிப்பெண்

 

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே 2 பேர் மட்டும் தமிழ் மொழியில் சதம் பெற்றுள்ளனர்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வெளியிட்டார். காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அவர் வருத்தம் தெரிவித்து கொண்டார். தேர்வு எழுதிய 8.17 லட்சம் பேர் பேரில், 7,55,451 பேர் தேர்வு பெற்று,  94.03 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 மாணவிகள் மாணவர்கள் 3,49,697 பேர் அடங்குவர்.  மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.38, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.45 ஆகும்.

இந்நிலையில் அதிகபட்சமாக கணக்குப்பதிவியலில் 6573 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இயற்பியலில் 812 பேர், வேதியலில் 399 பேர், உயிரியலில் 1494 பேர் ,தாவரவியலில் 340 பேர், விலங்கியலில் 154 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.  கணினி அறிவியலில் 4,618 பேர்,  வணிகவியலில் 5678 பேர் , பொருளியலில் 176 பேர்,  100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.  அதேபோல் அறிவியல் பாடப் பிரிவுகளில் 96. 32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91. 63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலை பிரிவுகளில் 81.89 சதவீதம் பேரும்,  தொழிற்பாட  பிரிவுகளில் 82.11 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. தமிழில் இரண்டு பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.ஆங்கிலத்தில் 15 பேர் சதம் அடித்துள்ள நிலையில் , இயற்பியலில் 812 பேர்,  வேதியலில் 399 பேர்,  உயிரியலில் 1494 பேர்,  கணிதத்தில் 690 பேர் சதம் அடித்துள்ளனர்.