×

இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர் மட்டுமே! பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசை

 

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் போர் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகளை மெல்ல, மெல்ல அசைத்து பார்க்க ஆரம்பித்து இருக்கும் இந்த போரால் வங்கதேசத்தில் தற்போது பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு புதிய கட்டுப்பாடுகளை வங்கதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவித்து உள்ளது.

மேலும் எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு பெட்ரோல், டீசல் தரப்படும் என்று அளவுகோலையும் நிர்ணயித்து அறிவிப்பும் வெளியிட்டு உள்ளது. 

அதன்படி இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் 2 லிட்டர் எரிபொருள், தனியார் கார்களுக்கு 10 லிட்டர், எஸ்யூவி வகை கார்கள், ஜீப்கள், மினி பஸ்கள் ஆகியவற்றிற்கு 20 முதல் 25 லிட்டர் எரிபொருள் வினியோகிக்கப்படும்.பிக்அப் வேன்கள், உள்ளூர் பஸ்களுக்கு 70 லிட்டர் முதல் 80 லிட்டர் வரையும், தொலைதூரம் செல்லும் லாரிகள், டிரக்குகள் போன்றவற்றிற்கு 200 லிட்டர் முதல் 220 லிட்டர் வரையும் எரிபொருள் தரப்படும். 

நெருக்கடியான இதுபோன்ற காலகட்டத்தில் எரிபொருள் விலை உயர்த்தப்படாது, மேலும் இந்த நெருக்கடியை மையப்படுத்தியோ அல்லது காரணமாக வைத்தோ எரிபொருளை கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்றும் வங்கதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷன் எச்சரித்துள்ளது.