×

10% வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றம்! மக்களை திமுக ஏமாற்றுகிறது- ஈபிஎஸ்

 

"மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் தனது நான்காவது கட்ட பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டம் அவிநாசி கிழக்கு ரத வீதியில் பிரச்சார உரையாற்றினார். முன்னதாக அவருக்கு அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சிவாச்சாரியார் பூரண கும்ப மரியாதை வழங்கினார்.  

திரளாக கூடி இருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, “அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நானே நேரில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தேன். 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக அரசு முறையாக செயல்படுத்தவில்லை. பலகட்ட தடைகளுக்கு பிறகு தற்போது திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனாலும் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வராமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். 100 ஆண்டுகள் கடந்தாலும் இந்த திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என வரலாறு சொல்லும். விலையை கட்டுப்படுத்தி ரேஷன் கடையில் முறையான பொருட்களை வழங்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறையில் 140 தேசிய விருதுகள் பெற்ற திறைமை வாய்ந்தது அதிமுக அரசு. அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்தது அதிமுக.

திமுகவிற்கு போதைப்பொருள் நிறைந்த மாநிலம் என விருது வழங்கலாம். ஊழலின் ஊற்றுக்கண் திமுக. 52 மாதங்களில் எதையும் கொடுக்காமல் 7 மாதத்தில் 35 லட்சம் குடும்பத்திற்கு 1000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் அந்த குடும்பத்தின் ஓட்டுக்காக மட்டுமே. பிரச்சனைகளை தீர்க்காமல் எத்தனை பிரச்சினை உள்ளது என கண்டறிந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் தான். நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் உள்ளது என கவர்ச்சியாக பேசி வெற்றி பெற்று இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது என சொல்லி மக்களை ஏமாற்றி உள்ளனர். மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்யவில்லை. விண்ணைமுட்டும் அளவுக்கு உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. காஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.100 மானியம் இன்று வரை வழங்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. 10 சதவிகிதம் மட்டுமே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது  தி.மு.க அரசு” என்றார்.