×

5 மாதங்களில் 12 பேர் பலி.. உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பிறப்பிக்க வேண்டும் - அன்புமணி.. 

 


தமிழக மக்களை காப்பாற்ற ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை கோயம்பேடு  பகுதியில் பிரவுசிங் செண்டர்  நடத்தி வந்த தினேஷ் என்பவர், ஆன்லைனின் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார். பலமுறை பணத்தை இழந்த போதிலும், தொடர்ந்து  கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார்.  பல லட்ச ரூபாய்  கடன் ஏற்பட்டதை அடுத்து, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.  

ஏற்கனவே  தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் உயிரிழந்துள்ளதை அடுத்து, உடனடியாக ஆன்லைன் சூதாட்ட  தடை சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பாமக இளைஞரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியான சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோயம்பேடு தினேஷ் கடந்த 5 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் 12-ஆவது உயிர். ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் தினமும் இத்தகைய தற்கொலைகள் நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் வாடிக்கையான ஒன்றாகி விடும்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசு இனியும் தாமதம் செய்யக்கூடாது. தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அனைத்து காரணங்களுடன் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார்.