×

MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!

 

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற அரசு, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று மதியம் 12 மணி முதல் www.tnmedicalselection.org அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய, குறைந்தபட்சம் ஒரு வாரம் வரை இந்த ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, மாணவர்கள் பதற்றமின்றி விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கும் முன்பாக, தங்களின் நீட் ஹால் டிக்கெட், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC), இருப்பிடச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய முக்கிய ஆவணங்களின் தெளிவான ஸ்கேன் பிரதிகளைத் தயாராக கைவசம் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தான் படித்தார்கள் என்பதற்கான விவரம், அவர்கள் EMIS எண் மூலமாக எடுத்துக் கொள்ளப்படும்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அல்லது EMIS எண் இல்லாத மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் சான்றொப்பம் பெற்ற சான்றிதழை பதிவேற்ற வேண்டியது அவசியமாகும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, மாணவர்கள் முதலில் இணையதளத்தில் தங்களது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து புதிய கணக்கை உருவாக்க வேண்டும்.

அதன் பின்னர், தங்களின் தனிப்பட்ட விவரங்கள், கல்வி, மற்றும் நீட் தேர்வு ஹால் டிக்கெட் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, இதற்கான விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்தி விட்டு, கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களைக் குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதிச் சமர்ப்பிப்பு செய்வதற்கு முன்பாக, பூர்த்தி செய்யப்பட்ட அனைத்துத் தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, நகல் எடுத்து வைத்துக் கொள்வது அவசியமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.