×

தொடரும் மழை :  முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

 

வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. புதுவையில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.  தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை, நிவாரண உதவிகள் பற்றி ஆலோசிக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது துரித நடவடிக்கை மேற்கொள்வது நிலையில் இருப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனையை தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் முக ஸ்டாலின் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொள்கிறார். இதனால் அவர் இன்று மாலை கடலூர்  செல்ல  இருப்பது குறிப்பிடத்தக்கது.