சொல்வது ஒன்று... செய்வது ஒன்றா..?? பொங்கல் தொகுப்பு குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்..!
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி என புகார் வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், திருவள்ளூர், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பொருட்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு முழுமையாக விநியோகம் செய்யப்படாததே, நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதோடு, டோக்கன் வழங்குவதில் குளறுபடி, ஊழியர்கள் பற்றாக்குறை, கைரேகை சரி பார்க்கும் இயந்திரத்தில் பழுது என நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளால், குடும்ப அட்டை தாரர்கள் பொங்கல் பரிசை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதோடு, பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் அறிவிக்கப்பட்ட 3 ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருட்களும் முழுமையாக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.