ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, இல்லாதபோது ஒரு நிலைப்பாடா? லயோலா மணி குற்றச்சாட்டு!
மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு (Delimitation Bill) திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், திமுகவின் இந்த நிலைப்பாட்டைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளர் லயோலா மணி கடுமையாக விமர்சித்துள்ளார்
இது குறித்து லயோலா மணி வெளியிட்டுள்ள கருத்தில், "தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்க முடிவு செய்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே திமுக செய்யும் துரோகம். ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடு என்பது திமுகவின் போலி முகத்தைக் காட்டுகிறது" எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளை 50 சதவீதம் உயர்த்தவும், மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதத்தை (தமிழ்நாட்டின் 7.2% பங்கு) அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பாதுகாக்கவும் சட்டப்பூர்வ உத்தரவாதம் அளித்தால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பது குறித்து திமுக பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. மறுபுறம், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல் 543 என்ற தற்போதைய எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும் என்றும், இம்மசோதாவை எதிர்க்க திமுக முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். இத்தகைய சூழலில், ஆட்சியில் இருந்தபோது இம்மசோதாவை கடுமையாக எதிர்த்த திமுக, தற்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முயல்வதாகக் கூறி லயோலா மணி முன்வைத்துள்ள இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது