ஒருவரால் 8 உயிர்களைக் காக்க முடியும்! உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
உறுப்பு தானத்தை பொறுத்தவரை, மூன்று வெவ்வேறு தரப்பினரிடம் இருந்து அது பெறப்படும். அந்தவகையில் மூளைச்சாவு அடைந்தவர்கள், உயிரோடு வாழ்பவர்கள், இயற்கை மரணமடைபவர்கள் என 3 தரப்பினரின் உடலிலிருந்து உறுப்புகள் தானமாக பெறப்படும்.
மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கணையம், இரைப்பை, சிறுகுடல், குரல்வளை, பெண்களாக இருந்தால் கருப்பை, கண்கள், காதின் நடுஎலும்புகள், எலும்புகள், குருத்தெலும்பு, தோல்கள், நரம்புகள், தமனிகள், கைகள், கை மற்றும் கால் விரல்கள், தோல் ஆகியவற்றை தானமாக பெறலாம்.
இதுவே இயற்கை மரணமடைந்தவர்களிடம் இருந்து கண்விழித்திரை, இதய வால்வுகள், தோல்கள், எலும்புகள், அதை பாதுகாக்கும் தசை நார்கள், குருத்தெலும்பு, நரம்புகள், தமனிகள் ஆகியவற்றை தானமாகப் பெறலாம்.
உயிரோடு வாழ்பவர்கள், சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலில் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தில் ஒரு பகுதி, ரத்தம், எலும்பு மஜ்ஜை ஆகியவற்றை தானம் செய்யலாம்.
எப்படி உடல் உறுப்பு தானம் செய்வது? மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் விண்ணப்பம் பூர்த்திசெய்து கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம். இவையன்றி, ‘டோனர் கார்டு’ எனும் அடையாள அட்டையை தமிழக அரசு இதற்கென்றே அமைத்துள்ள (https://transtan.tn.gov.in/) இணையதளத்தில் பெயர், சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள், தோல் என தாங்கள் தானம் செய்ய நினைக்கும் உறுப்பு குறித்த விவரத்தை பதிந்து வைத்துக் கொள்ளலாம்.
உடல் உறுப்பு தானத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்பவர்கள், தங்கள் விவரங்களை குடும்பத்தினரிடம் தெரிவித்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அப்போதுதான் இறந்தபின், உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினரால் தாமதத்தை தவிர்க்க முடியும்.