திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும்- தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும் தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை என்பதால் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்த ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்த பக்தர்களுக்கு 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோன்று திருப்பதியில் வழங்கக்கூடிய இலவச நேர ஒதுக்கீடு சர்வதரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். எந்த வித டிக்கெட்டுகளும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்தில் வரக்கூடிய பக்தர்கள் வரிசை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பி சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் சிலாதோரணம் வரை அமைக்கப்பட்டுள்ள வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அவ்வாறு வரிசையில் காத்திருக்கக் கூடிய வரிசையில் நுழையும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு 28 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 3 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் 67 ஆயிரத்து 722 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 705 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.45 கோடி காணிக்கையாக செலுத்தி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அவ்வப்பொழுது காபி, மோர், அன்னப்பிரசாதங்களான பொங்கல், உப்புமா, சாம்பார் சாதம், உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத மையத்திலும் காலை முதல் இரவு வரை ஒரு மணி நேர இடைவெளிக்கு மத்தியில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் அறைகள் கிடைக்காத பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்ட நிழற்பந்தல்களில் தங்கி இருந்தனர். திருமலையில் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அறைகள் இருப்பதால் அனைவரும் திருமலையில் அறை பெற முயற்சிக்காமல் திருப்பதியில் அறை எடுத்து தங்கி திருமலைக்கு வரும்படி தேவஸ்தான அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.