×

குளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி

 

கும்மிடிப்பூண்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேது. கூலி தொழிலாளியான சேதுவின் மனைவி இன்று வழக்கம் போல் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை தர்ஷினி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். வீட்டு வேலைகளை கவனித்து வந்த பெற்றோர் சிறிது நேரத்தில் குழந்தையை காணாமல் தேடினர். அப்போது வீட்டின் அருகே இருந்த குளத்தில் குழந்தை தவறி விழுந்தது தெரியவந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை தர்ஷினி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகே இருந்த குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.