தண்ணீர் வாளியில் தலைகுப்புற விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
சென்னை நந்தனத்தில் வீட்டில் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை தனுஷ், தண்ணீர் வாளியில் தலை குப்புற விழுந்து உயிரிழந்தது.
சென்னை நந்தனம் ஜோகி தோட்டம் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் நான்காவது தளத்தில் வசிப்பவர் ஸ்ரீராம். இவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தான லட்சுமி. இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை தனிஷ். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி அதே தளத்தில் வசிக்கும் அலமேலு என்பவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதையடுத்து அவரை பார்ப்பதற்காக சந்தான லட்சுமி குழந்தையை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
குழந்தையை கீழே இறக்கிவிட்டு அலமேலுவிடம் அரை மணிநேரத்துக்கும் சந்தான லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லையே என சந்தான லட்சுமி தேட ஆரம்பித்தார். அலமேலு வீட்டு குளியல் அறையில் தண்ணீர் நிரம்பி இருந்த பிளாஸ்டிக் வாளியில் குழந்தை தலை குப்புற விழுந்து மயங்கி கிடந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று இரவு இறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.