×

விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தைக்கு எமனாய் வந்த பள்ளி பேருந்து

 

குடியாத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து முன்பக்க சக்கரத்தில் உடல் நசுங்கி  ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் இருந்து நாள்தோறும் ஏராளமான மாணவர்களை அந்த பள்ளி பேருந்து மூலம் காலை பள்ளிக்கு அழைத்து சென்றும் மாலை பள்ளி முடிந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டு வரும் நிலையில், இன்று மாலை செட்டிகுப்பம் வன்னியர் வீதி  பகுதியில் தனியார் பள்ளி பேருந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது கட்டிட மேஸ்திரி மோகன் என்பவருடைய ஒரு வயது பெண் குழந்தை துர்கா ஸ்ரீ தனியார் பள்ளி பேருந்து முன் சக்கர டயரில் சிக்கி உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இது குறித்த தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு உடல் கூர் ஆய்வுக்கு எடுத்துச் செல்லும் போது, உறவினர்களும் பொதுமக்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தப்பி ஓடிய  ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . பின்னர் காவல் துறையினர் உறவினர்களிடமும் பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் உடல் கூறு ஆய்வுக்காக குழந்தையின் உடலை அனுப்பி வைத்தனர். ஒரு வயது பெண் குழந்தை தனியார் பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.