அதிமுக பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி
பண்ருட்டி அருகே அதிமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு பணிகன்குப்பம் பகுதியைச் சேர்ந்த வேலு(52) என்பவர் சென்றிருந்தார். அப்போது கூட்டத்தில் அமர்ந்து விழா மேடையில் ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்த்து கொண்டிருந்தபோது திடீரென்று வேலு என்பவர் இருக்கையில் அமர்ந்தபடியே மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் வேலுவை பரிசோதனை செய்தபோது இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர்.தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.