மீண்டும் ஒரு உயிரை குடித்த நீட் தேர்வு... சேலத்தில் நீட் தேர்வால் மாணவி வீபரீத முடிவு..!!
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிகா (20). இவர் 2024-ம் ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெறுவதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிவையில் அவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த கீர்த்தனா(19) என்ற மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது மாணவி அதே முடிவை எடுத்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் நிலையில், நீட் தேர்விற்கு தயாராகி வரும் மாணவி உயிரை மாய்த்துக்கொள்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தாண்டிற்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்டு, வினாத்தாள் கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இத்தேர்வை நாடு முழுவதும் இருந்து 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதி இருந்த நிலையில், அவர்களுக்கான மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்தது.
இந்த முறை தேர்விற்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்திடாமல் இருக்க இந்திய விமானப்படை உதவியுடன் வினாத்தாள்கள் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளன.