×

மிலாடி நபி திருநாளை முன்னிட்டு 2,000 கிலோ அரிசியில் நெய் சோறு தயாரித்து அன்னதானம்..!

 

இஸ்லாமியர்களின் இறைத்தூதராக கருதப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபியாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய தினம் நபிகள் நாயகத்தின் புகழையும், ஈகை பண்பையும் பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படும்.

மேலும் இன்று ஏழை எளிய மக்களின் பசியை ஆற்ற வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவாக கருதப்படுகிறது. அதன்படி பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ’தப்ருக்’ எனப்படும் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன. அதன்படி, கோயம்புத்தூர், உக்கடம், ஜி.எம் நகர் பகுதியில், சுன்னத் ஜமாத் சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணும் அளவிற்கு நெய் சோறு சமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வரிசை அமைக்கப்பட்டு, காலை முதலே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு வழங்கும் நிகழ்விற்கு அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை புரிந்து வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து ’சுன்னத் ஜமாத்’ அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஏழைகளின் பசியை போக்குவது, அதன்படி நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான இன்று ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் வகையில், உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது

இந்த ஆண்டு 2,000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்பட்டு, இதுவரை 2000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தங்களுடைய அமைப்பு சார்பில் ஒவ்வொரு வருடமும், பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது, ஜாதி, மத பேதம் இன்றி அனைவரும் வந்து உணவு வாங்கிச் செல்கின்றனர்.

இறைதூதர் கூறிய அனைத்து கடமைகளையும் செய்வது, ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாகும். ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை, இதுபோன்று ஏழை, எளிய உறுப்பு உணவு வழங்கப்படும்” என்றனர். கடந்த பத்து ஆண்டுகளாக சுன்னத் ஜமாத் சார்பில் இலவசமாக நெய் சோறு வழங்கப்பட்டு வரும் நிலையில், 11வது ஆண்டாக இன்றும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், வேலூர் சார்பனாமேடு பகுதியில், மிலாடி நபி திருநாளை முன்னிட்டு, 1,000 கிலோ அரிசியில் உணவு தயாரிக்கப்பட்டு இன்று காலை முதல் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.