பழைய ஓய்வூதியத் திட்டம்- நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக நாளை முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர்கள் தெரிவித்ததாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது, சிறப்புக் காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், எங்களின் கோரிக்கை தொடர்பாக இதற்கு முன்பு 5 முறை அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்தார். இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஓய்வூதியம் தொடர்பாக நாளை முதல்வர் அறிவிப்பு வெளிடுவார் என்று அமைச்சர் தெரிவித்ததாக கூறினார். முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்ந்து நாளைய தினம் ஒருங்கிணைப்பாளர்கள் கூடி எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம் என்றும் முதலமைச்சரின் அறிவிப்பை பொறுத்து ஜனவரி 6 போராட்டம் தொடர்பாக அடுத்த கட்ட முடிவு எடுப்போம் என்றும் கூறினார். குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் மீண்டும் அறிவிப்பார் என்று நம்பிக்கையோடு உள்ளோம் என்றும் கூறினார்.