அய்யோ பாவம்..இப்படியாகிடுச்சே... வீடு நிறைய பணம்.. யூடியூபர் வீடியோ வெளியிட்ட நிலையில் கொள்ளை..!
நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் விஐபி கார்டன் காலனியில் பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மதுமிதாவின் கணவர் வினோத்குமார் குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த நிலையில், மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். முன்னதாக, தனது வீட்டில் இருக்கும் பணத்தை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
நாகர்கோவில் மாவட்டம் தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 36). இவர் ஏலக்காய் மொத்த வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி மதுமிதா (வயது 29), இவர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து அவ்வபோது எடுக்கும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்களுக்கு லைக்குகள் சும்மா அள்ளி கொண்டு போகுமாம்.
இந்தநிலையில், மதுமிதா தான் வாங்கும் புதிய தங்க நகைகள், வீட்டில் இருக்கும் கட்டுக்கட்டான பணம் மற்றும் தாங்கள் எங்கு செல்கிறோம் போன்ற அனைத்து விவரங்களையும் தொடர்ந்து ரீல்ஸாக வெளியிட்டு வந்துள்ளார். மேலும் கழுத்து நிறைய நகைகள் அணிந்து கொண்டும், கட்டுக்கட்டாக பணத்தை மெத்தையில் அள்ளிப்போட்டு கொண்டும் மதுமிதா டான்ஸ் ஆடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளார்.
இவர்களது வீடியோக்களை தொடர்ந்து கண்காணித்து வந்த கொள்ளையர்கள் நேரம் பார்த்து இவர்களது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் ரூ.50 ஆயிரம் ரொக்கம் (இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி) கொள்ளையடித்து சென்றனர்.
வெளியே சென்று இருந்த தம்பதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில் சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணித்து கொள்ளையர்களைத் நகைகள், பணத்தை அள்ளி சென்றது தெரியவந்துள்ளது.