×

ஜெயலலிதா புகைப்படத்துடன் ஸ்டாலினைச் சந்திக்க வந்த ஓ.பன்னீர்செல்வம்..!

 

அண்ணா அறிவாலயத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் காரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் இன்னும் அப்படியே வைக்கப்பட்டிருந்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியது. மூன்று முறை அதிமுகவின் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், இன்று தனது அரசியல் வாழ்வின் புதிய பயணத்தைத் தொடங்கும் வகையில் திமுகவில் இணைய வந்தபோதும், தனது அரசியல் அடையாளமான 'அம்மா'வின் படத்தை அகற்றாமல் வந்திருந்தது அவரது தீவிர விசுவாசத்தைக் காட்டுவதாக ஒரு தரப்பினர் பேசிக்கொண்டனர்.

இருப்பினும், அதிமுகவின் பரம எதிரியாகக் கருதப்படும் திமுகவின் தலைமையகமான அறிவாலயத்திற்குள், ஜெயலலிதாவின் படத்துடன் ஓபிஎஸ் நுழைந்த காட்சி அங்கிருந்த உடன்பிறப்புகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "கொள்கைகள் மாறினாலும், கொண்ட தலைவரை மறக்கவில்லை" என அவரது ஆதரவாளர்கள் இதனை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டாலும், ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் ஆகப்போகும் நேரத்தில் பழைய கட்சியின் அடையாளத்தைச் சுமந்து வந்தது அரசியல் விமர்சகர்களிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.