×

இடையீட்டு மனு தாக்கல் செய்ய இபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி - ஓபிஎஸ் அவசர ஆலோசனை

 

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி,  ஈபிஎஸ் அணி என இரண்டாக  பிரிந்து தேர்தலை சந்திக்கின்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது  இந்த சூழலில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடினார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் ஆணையம் இடைக்கால பொது செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது என்றும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும்  ஈரோடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று  ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில்  நீதிபதிகள் தினேஷ், மகேஷ்வரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 
இரட்டை இலை சின்னம் ஒதிக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக 3 நாட்களில் பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட ஏதுவாக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார் பழனிசாமி. அந்த இடைக்கால மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்படும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த வழக்கில் தங்களது தரப்பின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தனது ஆதரவாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.