காதலிக்க கூறி சக மாணவர் டார்ச்சர் செய்ததால் நர்சிங் மாணவி தற்கொலை
காதலிக்க கூறி சக மாணவர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால் மனம் உடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி மாவட்டம் கும்பளபாடி கிராமத்தில் வசித்து வரும் பிரபு - புனிதா தம்பதியினரின் மகள் 21 வயது அருணா. தனியார் விடுதியில் தங்கி தஞ்சை மருத்துவ கல்லூரியில் நர்சிங் (பி. எஸ். சி கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி) படித்து வந்தார். இதே கல்லூரியில் தஞ்சை மாவட்டம் தோட்டக்காடு கிராமத்தை சேர்ந்த கவின் என்பவர் டிப்ளமா நர்சிங் படித்து வருகிறார். நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவி அருணாவை சக மாணவர் கவின் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து படிக்க வந்த மாணவி அருணா காதலிக்க மறுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 4ம் தேதி கல்லூரி வளாகத்தில் கவின் சக மாணவிகள் முன்னிலையில் அருணாவின் கழுத்தை நெரித்து கன்னத்தில் அறைந்து காதலிக்க சொல்லி மிரட்டி உள்ளார். இது குறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் மாணவன் கவினை கண்டித்து இனி இது போல் சம்பவம் நடைபெற கூடாது என்று கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று 26ம் தேதி மாலை அருணாவிற்கு மாற்று எண்ணில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்ட கவின், நான் சொல்லும் படி கேட்கவில்லை என்றால் உன் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் மன உலைச்சலுக்கு ஆளான மாணவி அருணா தான் தங்கி இருந்த விடுதியில் விஷம் அருந்தி மயக்கம் அடைந்தார். உடனடியாக சக மாணவிகள் அருணாவை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அருணா உயிரிழந்தார் தகவல் அறிந்து வந்த மாணவியின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தன் மகள் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனது மகள் தற்கொலைக்கு காரணமான மாணவனுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். கவினை மருத்துவ கல்லூரி காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.