×

செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது - தினகரன் கண்டனம்!!
 

 

செவிலியர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்திருப்பதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பல வருடங்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தங்களை, திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை DMS வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய செவிலியர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு 8 வருடங்களாகியும் தற்போது வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை எனக்கூறி செவிலியர்கள் ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக தேர்தல் வாக்குறுதி 356-ல் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றி வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை கைது செய்து அடக்குமுறையை கையாண்டுள்ளது.

 கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் செவிலியர்கள் ஆற்றிய பணியை நினைவு கூர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதுடன், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.