இனி பாட்டிலை உள்ள போட்டா காசு வரும்! மது பாட்டில்களை திரும்பப் பெற தானியங்கி இயந்திரம்
டாஸ்மாக் நிர்வாகம், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு தானியங்கி இயந்திர முறையை அறிமுகப்படுத்தும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, காலி மது பாட்டிலை ஒப்படைக்க விரும்பும் மதுபான பிரியர்கள், முதலில் தங்களது கைப்பேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவர்களது கைப்பேசிக்கு வரும் OTP எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு காலி பாட்டிலில் ஒட்டப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து தானியங்கி இயந்திரத்தில் அந்த காலி பாட்டிலை வைக்க வேண்டும். பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் ரூ.10 தொகை மதுப் பிரியரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மற்றொரு முறையாக, பயனாளர்கள் தங்களது UPI செயலி மூலம் இயந்திரத்தில் காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, பின்னர் காலி பாட்டிலில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன்பிறகு காலி பாட்டிலை தானியங்கி இயந்திரத்தில் செலுத்த வேண்டும். பாட்டில் சரிபார்க்கப்பட்டதும், அதற்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த புதிய முறை வெற்றிகரமாக செயல்பட்டால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும், தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் பணியில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமம் குறைவதுடன், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.