வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து டெலிகிராமுக்கும் நோட்டீஸ்..!
பயனர்கள் தங்களின் போன் எண்களை மறைத்துவிட்டு யூசர்நேம்களைப் பயன்படுத்தும்போது, ஆன்லைன் ஆள்மாறாட்டம், பணமோசடி மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற இணையக் குற்றங்கள் பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என்று மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்த அடையாளம் தெரியாதத் தன்மை காரணமாக, சைபர் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து எளிதாகத் தப்பித்துவிடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
முன்னதாக நேற்று, வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த மூன்று நாட்களுக்குத் தடை விதித்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள மெட்டா நிறுவனம், ஆள்மாறாட்டத்தைத் தடுக்கப் பல்வேறு பாதுகாப்பு அடுக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
அரசு அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் பெயர்களில் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதைத் தடுக்க அந்த யூசர்நேம்கள் முடக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், ஒரே நேரத்தில் பல புதிய நபர்களைத் தொடர்புகொள்வதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மெட்டா நிறுவனத்தின் இந்த விளக்கத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனத்தை தொடர்ந்து, பிரபல மெசேஜிங் செயலிகளான டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களைப் பகிராமல், தனியுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் இந்த யூசர்நேம் அம்சம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு இரு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.