ஓட்டு போடாமல் இருப்பது ஜனநாயக துரோகம்..! - நீலாங்கரையில் வாக்களித்த பின் சீமான் ஆவேசம்..!
சென்னை நீலாங்கரை ஓட்டுச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றிய பிறகு நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: வெளிநாடுகளில் வாழும் நமது சொந்தங்களில் சிலர் ஆர்வமாக ஓட்டளிக்க வருகின்றனர். சிலர் வர முடியாமல் போய் விடுகிறது. இங்கே தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கு தபால் ஓட்டு செலுத்த வைக்கிறார்களோ, அதே மாதிரி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சிலர் தொகுதிகள் நிற்க வேண்டும் என்றால் அவர்கள் ஓட்டுகளை செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
அதனை தவிர்ப்பதற்கு தேர்தல் கமிஷன் கவனத்தில் எடுத்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் நமக்கு இருக்கும் கடைசி வலிமை, கருவி என்பது ஓட்டு தான். அதனை நாம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு 75 சதவீதம், 80 சதவீதம் என 100 சதவீதம் வாக்கில் இவ்வளவு தான் பதிவு ஆகிறது என்றால் ஓட்டு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்னை என்று கேள்வி வருகிறது. உங்களை நம்பி தான் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
100 சதவீதம் ஓட்டினை செலுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து கணக்கில் காட்டாமல் மறைப்பது இது எல்லாம் தான் தேச துரோகம் என்பது இல்லை. ஓட்டு செலுத்தாமல் இருப்பதும் ஒருவித தேச விரோத குற்றம் தான். ஜனநாகய துரோகம் தான். இதனை மக்கள் செய்ய கூடாது. கற்றவர்கள் தான் மற்றவர்களுக்கு வழி காட்ட வேண்டும், எல்லோரும் நாம் ஒரு ஓட்டு செலுத்தி என்னவாக போகிறது என்று நினைக்கின்றனர். அப்படி இல்லை ஒரு வாக்கில் இருந்து தான் மாற்றம் வரும். ஓட்டளிப்பது நம் பொறுப்பும், கடமையும், முதன்மையானது. தவறாமல் அனைவரும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.