☰
×

நேரில் மட்டுமல்ல ஜிபே-விலும் லஞ்சமா? 14 சார் பதிவாளர் அலுவலகங்களில்  ரூ.38.9 லட்சம் கண்டுபிடிப்பு..!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை முதல், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சென்னையில் அசோக் நகர், அண்ணா நகர், குன்றத்தூர், பம்மல், பெரியமேடு, சைதாப்பேட்டையில் உள்ள இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்கள், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையானது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளுடன், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆய்வுக்குழு அலுவலர்கள் இணைந்து மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் 14 சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இதில், சார்பதிவாளர் அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அதன்படி, மொத்தம் ரூ.18 லட்சத்து 96 ஆயிரத்து 415 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அலுவலகங்களில் பணிபுரியும் சிலரின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஜிபே மூலமாக நடைபெற்ற ரூ.20 லட்சத்து 2 ஆயிரத்து 615 மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

இதன்படி, 14 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.18.96 லட்சம் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதுடன், ரூ.20.02 லட்சம் மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான ஜிபே பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.38 லட்சத்து 99 ஆயிரத்து 30 ஆகும்.

மேலும் சந்தேகத்திற்கிடமான இந்த பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.