ஒன்றல்ல...ரெண்டல்ல...24 ஆண்டுகளுக்கு பிறகு, ஞானபீடம் விருது பெறும் தமிழர்..!
1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் தான் வைரமுத்து. இந்த படத்தில் வரும் இது ஒரு பொன் மாலை பொழுது என்ற பாடல் இன்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.திரைத் துறையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளவர்கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்றுள்ளார். அதுபோல, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இவருக்கு 2014-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது பாடல்களுக்காகவும், இலக்கியத்தில் ஆற்றிய பங்கிற்காகவும் பல விருதுகளை வென்றுள்ள வைரமுத்துவுக்கு தற்போது ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, ஒருவரின் வாழ்நாள் முழுவதுமான இலக்கியப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு 1962-ம் ஆண்டு முதல் ஞானபீடம் விருது, வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிகவும் பழமையான இலக்கிய விருதுகளில் ஒன்றாக இருக்கும் இந்த விருதை, டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த, சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட பாரதிய ஞானபீடம் அறக்கட்டளைதான் வழங்கி வருகிறது.
அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த விருதை தமிழகத்தில் இருந்து, 1975-ம் ஆண்டு எழுத்தாளர் அகிலன் (சித்திரப்பாவை நாவல்), கடந்த 2002ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய 2 பேர் மட்டுமே இதுவரை தமிழில் இந்த விருதை பெற்றுள்ளனர். விருது பெறுபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு சரஸ்வதி தேவியின் வெண்கல சிலை மற்றும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும். கடந்த 2024ம் ஆண்டு, 59வது ஞானபீட விருதை, இந்திய கவிஞர் வினோத் குமார் சுக்லா பெற்றிருந்தார்.
தமிழகத்தில் கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு ஜெயகாந்தன் பெற்றிருந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஒரு தமிழராக இந்த விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகள், தமிழகத்தில், கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற விருதுகளை பெற்றுள்ள வைரமுத்து, தனது பாடல்களுக்காக 7 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
ஞானபீட விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் வைரமுத்து, “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கிய பணி தொடரும்” எனத் தெரிவித்தார்.
பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகிறது.