கைது செய்யப்படவில்லை, பள்ளியில் சேர்க்கப்பட்டார்! - வேலூர் சிறுவன் குறித்த வதந்திகளுக்குத் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!
வேலூர் தீர்த்தகிரி முருகன் கோவிலில் விபூதி வழங்கி யாசகம் பெற்று வந்த, 'குட்டி முருகர்' என்று அழைக்கப்படும் சிறுவனைப் போலீசார் கைது செய்ததாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது எனத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. உண்மையில், அந்த மாற்றுத்திறனாளி சிறுவன் மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கல்வி கற்கும் வசதிக்காக அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அந்தச் சிறுவனின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவரது பெற்றோருக்குத் தேவையான உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
குழந்தை நலன் சார்ந்த இந்த நற்பணியைத் தவறாகச் சித்தரித்து, சிறுவன் கைது செய்யப்பட்டதாக வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறார்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்புவது கடும் குற்றமாகும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுமக்கள் இத்தகைய போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பகிருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.