×

நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுப்பா?  கமல்ஹாசன் கண்டனம்..

 

டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  
 
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் திரையரங்கில் ,  நேற்று  சிம்பு, பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பத்து தல’ திரையிடப்பட்டது. இந்தப் படத்தின்  முதல் காட்சியை பார்ப்பதற்காக நரிக்குறவர்கள் சிலர் , முறையாக  டிக்கெட் பெற்று வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதுதொடர்பான வீடியோ  வைரலாகி கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பின்னர் அவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

பத்து தல படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால்  12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று திரையரங்கம் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.  இதையடுத்து ரோகிணி திரையரங்க  நிர்வாகத்துக்கு எதிராக நெட்டிசன்களும், சமூக  ஆர்வலர்கள், திரைத்துறையினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.    அந்தவகையில் நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்காசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவரது ட்விட்டர் பதிவில், “டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.” என்று குறிப்பிட்டுள்ளார்.