×

 80 வருடங்களாக "பொங்கல்" கொண்டாடாத கிராமம்

 

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை கடந்த 80 வருடங்களாக கொண்டாடாமல் அமைதியாக கடந்து செல்கின்றனர் செம்பராயனேந்தல் கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ளது செம்பராயனேந்தல் கிராமம், 75 வீடுகளில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விவசாயம், விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். வைகை ஆற்றை ஒட்டியுள்ள கிராமம் என்பதால் நிலத்தடி நீர்மட்டமும் அதிகமாக இருப்பதால் நெல், வாழை, கரும்பு, தென்னை விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. தை முதல் நாளை பொங்கல் திருநாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் வீட்டு வாசல்களில் புது அடுப்பில், புது பானை வைத்து புது அரிசி இட்டு பொங்கல் வைத்து விவசாயத்திற்கு  உறு துணையாக இருக்கும் சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள். இன்று தமிழகம் எங்கும் விழாக்கோலம் பூண்ட நிலையில் செம்பராயனேந்தல் கிராமத்தில் மட்டும் எந்த வித ஆராவாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக இக்கிராம மக்கள் பொங்கல் திருநாள் கொண்டாடுவது இல்லை. முன்பு  வீட்டு வாசலில் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடிய போது வீடுகள் அனைத்தும் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இது தொடரவே பொங்கல் கொண்டாடுவதை நிறுத்தி விட்டனர். இதனை பரம்பரை பரம்பரையாக கடை பிடித்து வருகின்றனர். செம்பராயனேந்தல் கிராம மக்கள் பிழைப்பிற்காக வேறு ஊர் சென்றாலும் பொங்கல் கொண்டாடுவது இல்லை. பொங்கல் கொண்டாட்டம் இல்லை என்பதால் வீடுகளுக்கு சுண்ணாம்பு பூசுவது, பெயின்ட் அடிப்பதும் பழுது பார்ப்பதும் கிடையாது.  கவுசல்யா கூறுகையில் எங்கள் ஊர்ல எப்பவுமே பொங்கல் திருநாள் கொண்டாடுவது கிடையாது. தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் எங்கள் ஊரில் மட்டும் இல்லாமல் இருப்பது வேதனை தான். என்றார். சங்கீதா கூறுகையில் " நான் திருமணமாகி செம்பராயனேந்தல் வந்து மூன்று வருடமாகி விட்டது. எனக்கு வழங்கிய பொங்கல் சீர் கூட பயன்படுத்த வில்லை. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் நான், எங்கள் ஊரில் விசேசமாக கொண்டாடுவோம் என்றார். சங்கிலி அய்யாதுரை " எனக்கு 80 வயதாகி விட்டது, விபரம் தெரிந்த நாளில் இருந்து இதுவரை பொங்கல் கொண்டாடியது இல்லை. பல வருடங்களுக்கு முன் வீட்டு வாசல்களில் பொங்கல் வைத்த போது வீடுகள் தீப்பிடித்து எரிந்து போனதால் இன்று வரை அதனை கடை பிடிக்கிறோம். மாடுகள் வைத்திருப்பவர்கள் மறு நாள்  மாட்டு பொங்கல் கொண்டாடுவார்கள், பொங்கல் கொண்டாட தால் வருத்தம் ஏதும் இல்லை என்றார்.