எந்தக் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது: பிரேமலதா!
விஜயகாந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி தவெக தரப்பில் மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், விஜயின் திருமண நாள் மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செண்டிமெண்ட்டாக ஆகஸ்ட் 25ஆம் தேதி என்று இறுதி செய்ததாகக் கூறினார். ஆனால் காவல்துறை கேட்டுக் கொண்டதால் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தவெக மாநாடு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விஜயகாந்தின் மறைவுக்குப் பின் பல்வேறு திரைப்படங்களிலும் அவரின் புகைப்படங்கள், பாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சூழலில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரேமலதா கூறியதாவது:-
விஜயகாந்த் புகைப்படத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்த கூடாது. ஏனென்றால் அவரால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாக தேமுதிக இருக்கிறது. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த். அதனால் வேறு கட்சிகள் விஜயகாந்தின் புகைப்படத்தை எப்போதும் பயன்படுத்த கூடாது. எங்களுடன் கூட்டணிக்கு அமைக்கும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் விஜயகாந்த் புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எந்தக் கட்சியும் விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது. அதேபோல் சினிமாவில் விஜயகாந்த்தின் புகைப்படத்தை யாரும் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே திமுக கூட்டணி பக்கம் தேமுதிக சாய்ந்து வருகிறது. இதனால் விஜயகாந்த் செல்வாக்கை விஜய் பயன்படுத்துவதைத் தொடக்க நிலையிலேயே பிரேமலதா தடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.