×

இனி எம்.எல்.ஏ ஆபீஸுக்கு போக தேவையில்லை! QR கோடு ஸ்கேன் செய்து ஆன்லைனில் புகார் அளிக்கலாம்..!

 

சென்னை அடுத்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தவெக எம்.எல்.ஏ காமாட்சி, தொகுதி மக்களின் இன்னல்களை உடனுக்குடன் அறிந்து அதற்கு தீர்வு காணும் நோக்கில் புதிய கியூஆர் கோடு (QR Code) வசதி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக, பணிச்சுமை காரணமாக அலுவலகத்திற்கு நேரில் வர இயலாதவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிய முறையில் பதிவு செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

இந்த கியூஆர் கோடு செயல்பாட்டு முறை குறித்து அவர் விளக்குகையில், பொதுமக்கள் தங்களது செல்பேசி மூலம் இந்த கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்தவுடன் ஒரு புகார் மனு படிவம் (Complaint Form) திரையில் தோன்றும் என்றார். அதில் பொதுமக்கள் தங்களின் பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் தாங்கள் சந்திக்கும் குறைகள் குறித்த விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்யலாம் என்றும், அவ்வாறு பெறப்படும் புகார்கள் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இப்புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே நாட்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புகார்கள் தமக்கு வந்து குவிந்துள்ளதாக எம்.எல்.ஏ காமாட்சி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவற்றில் பெரும்பாலான புகார்கள் சாலை சேதங்கள், மழைநீர் வடிகால் சீரமைப்பு, கழிவுநீர் கால்வாய் அடைப்பு மற்றும் குப்பைகளை முறையாக அகற்றாதது போன்ற தினசரி அடிப்படை வசதிகள் சார்ந்தவையாகவே உள்ளன எனக் குறிப்பிட்ட அவர், சிறிய அளவிலான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருவதாகவும், பெரிய அளவிலான திட்டப் பணிகளுக்கு 10 முதல் 15 நாட்களுக்குள் தீர்வு காண திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்கு உதாரணமாக, பொழிச்சலூர் பகுதியில் ஏரிக்கரையோரம் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுவதாக ஆன்லைன் மூலம் வந்த புகாரின் அடிப்படையில், தற்பொழுது அங்கு போர்க்கால அடிப்படையில் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். மேலும், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் இல்லாத இடங்களை கண்டறிந்து, அங்கு புதிய குப்பைத்தொட்டிகளை உடனடியாக அமைக்குமாறு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதேபோல், பல்லாவரம் தொகுதி முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான விரிவான அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வரும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே பல்லாவரத்தில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முழுமையாகச் சீரமைத்து, வரும் காலங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காத ஒரு நிலையை உருவாக்குவதே தங்களது முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக பேசிய அவர், “நாங்கள் தற்பொழுது புதிய ஆட்சியை அமைத்துள்ளதால், முதலில் மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் கள நிலவரங்கள் என்ன என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள விரும்புகிறோம், அதன் பிறகே அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை உருவாக்க முடியும்” என்றார். இந்த கியூஆர் கோடு வசதி அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ஒட்டப்பட உள்ளதாகவும் கூறிய அவர், அரசியல் வேறுபாடுகள் இன்றி தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் நலனுக்காகப் பணியாற்றி வருவதாகவும், மக்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னை நேரில் சந்தித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறி முடித்தார்.