இனி பென் டிரைவ் பயன்படுத்த தடை... என்ன காரணம்!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சைபர் பாதுகாப்பை அதிகரிக்கவும், முக்கியமான அரசு தகவல்களை பாதுகாக்கவும், டேட்டா திருட்டு, வைரஸ் தாக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகல் அபாயங்களைக் குறைக்கவும், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள சிவில் செயலகம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை கமிஷனர் அலுவலகங்களில் பென் டிரைவ்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு ஸ்ரீநகர், ஜம்முவில் உள்ள சிவில் செயலகம் மற்றும் மாவட்ட கமிஷனர் அலுவலகங்களிலும் இது பொருந்தும். சில நேரங்களில் பென் டிரைவ் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு துறைக்கு 2 அல்லது 3 பென் டிரைவ்களுக்கு மட்டும் அனுமதி கிடைக்கும். அதற்கு அந்த துறையின் தலைவர், மாநில தகவல் துறை அதிகாரிக்கு ஒரு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். தேசிய தகவல் மையம் (NIC) தான் இதற்கு அனுமதி வழங்கும். அனுமதி கிடைத்த பிறகு, அந்த பென் டிரைவை தேசிய தகவல் மைய அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவர்கள் அதை சரிசெய்து, யார் பயன்படுத்துவது என்று பதிவு செய்வார்கள். அதற்கு பிறகுதான் அந்த பென் டிரைவை பயன்படுத்த முடியும்.
பென் டிரைவுக்கு பதிலாக அரசு டிரைவ் என்ற ஒரு புதிய முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு கிளவுட் அடிப்படையிலான சேவை. ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் 50 ஜிபி இடம் கிடைக்கும். இதில், தகவல்களை பாதுகாப்பாக சேமிக்கலாம். எல்லா சாதனங்களிலும் இந்த தகவல்களை பார்க்கலாம். அரசு தகவல்களை பரிமாற வாட்ஸ் ஆப் போன்ற ஆப்களை பயன்படுத்த கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது. மேலும், பாதுகாப்பற்ற ஆன்லைன் சேவைகளையும் பயன்படுத்த கூடாது. இது டேட்டா பாதுகாப்பை பாதிக்கும்.
அனைத்து முக்கியமான தொழில்நுட்ப தகவல்களான ஐசிடி கட்டமைப்பு வரைபடங்கள், சிஸ்டம் கட்டமைப்புகள், பாதிப்பு மதிப்பீடுகள், ஐபி முகவரி திட்டங்கள் மற்றும் முக்கியமான தொழில்நுட்ப திட்டங்கள் அனைத்தும் ரகசியமாக வகைப்படுத்தப்பட்டு, எம்ஹெச்ஏ, சிஇஆர்டி-இன் வழிகாட்டுதல்கள் மற்றும் துறை தரவு வகைப்பாடு கொள்கைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான வழிகள் மூலம் மட்டுமே கையாளப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.அனைத்து துறைகளும் இந்த விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.