இனி 'NOC' சான்றிதழ் தேவையில்லை! நிலம் வாங்குபவர்களுக்கும் ரியல் எஸ்டேட்டர்களுக்கும் செம்ம நியூஸ்!
தமிழகத்தில் விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாறுவதை கட்டுப்படுத்த, 2017ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான புதிய விதிமுறைகளை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, 2017 ல் பிறப்பித்தது.
இதன் அடிப்படையில், நில வகைப்பாடு மாற்றங்கள் செய்யும் போது, சில நடைமுறை பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்பட்டது. இது குறித்து, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினர், தமிழக அரசிடம் முறையிட்டனர்.
இதன்படி, திட்டமில்லா பகுதிகளில், தரிசாக உள்ள விவசாய நிலங்களை, பயன்பாடு மாற்றம் செய்வதற்கு, இதுவரை வேளாண் துறை இணை இயக்குனரிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்த கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், தரிசாக உள்ள விவசாய நிலங்களை, வேறு பயன்பாட்டுக்கு மாற்ற கோரிக்கை வந்தால், நகர் மற்றும் ஊரக அமைப்பு எனப்படும், டி.டி.சி.பி., இயக்குனர் நேரடியாக முடிவு எடுக்கலாம்.
இதே போல், நன்செய் நிலங்களை பயன்பாடு மாற்றம் செய்யும் போது, வேளாண் துறை இணை இயக்குனர், மாவட்ட கலெக்டர் அளித்த முன் அனுமதியை, டி.டி.சி.பி., இயக்குனர் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ளார்.