×

இனி "முதியோர் இறப்பிற்கு 'வயது மூப்பு' எனப் பதிவிடக் கூடாது: பொது சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு..!!

 

தமிழகத்தில் ஆண்டுதோறும், 6.96 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதில், 23 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் உயிரிழக்கின்றனர்.

அதேநேரம், 73 சதவீதம் உயிரிழப்புகள், வீடுகளில் நடக்கின்றன. இந்நிலையில், இறப்புக்கான முழுமையான காரணங்களை கண்டறிந்து, அப்பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்வதற்கான ஆய்வை, பொது சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக, கரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 2023ம் ஆண்டுகளில் இறந்தவர்களின் விபரங்களை சேகரித்துஉள்ளது. அதில், எவ்வித காரணமும் இன்றி, 'வயது மூப்பு காரணமாக இறந்தனர்' என குறிப்பிடப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், இறந்தவர்களுக்கு இருந்த நோய் பாதிப்பு குறித்து கேட்டறிந்து, அதன் வாயிலாக இறந்திருக்கலாம் என கண்டறிந்துள்ளனர்.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, கரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், வீடுகளில் இறந்தவர்களின் விபரங்கள் அடிப்படையில், இறப்புக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டது. அதன்படி, 98 சதவீதம் இறப்புக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, 20 சதவீதம் பேர் வரை இதய நோயாலும், 7 சதவீதம் பேர் நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்களின் இறப்புக்கான காரணமாக, வயது மூப்பு என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலுார், திருநெல்வேலி உட்பட, 10 மாவட்டங்களிலும், இதேபோன்று ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து மாநிலம் முழுதும் இது விரிவுப்படுத்தப்படும்.

எதிர்வரும் காலங்களில், வீடுகளில் இறந்திருந்தாலும், இறப்புக்கான காரணத்தை டாக்டர் வாயிலாக உறுதி செய்து, சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படும். தற்போது, இறப்புகளை முறையாக பதிவு செய்யும்படி, அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் இருந்தால் தான், ஒரு பகுதியில் அதிகப்படியாக இறப்புக்கான காரணத்தை கண்டறிந்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.