என்ன பூசி மெழுகினாலும் உண்மை வரலாற்றை மறைக்க முடியாது முதல்வரே.. - நயினார் நாகேந்திரன் சாடல்..!!
காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், “எத்தனை பதிவுகளை இட்டு, பூசி மெழுக முயன்றாலும், உண்மை வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது, மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே! அப்படியானதை நான்கு கருப்பு-வெள்ளை புகைப்படங்களால் நீங்கள் அழிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது!
கர்ம வீரர் காமராஜரை அவமானப்படுத்த திமுக பரப்பிய அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும், கேலிச் சித்திரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் காங்கிரஸ் கட்சி மறந்திருக்கலாம், ஆனால் தமிழக மக்களின் நினைவில் இவையெல்லாம் நீங்கா ரணங்களாக இன்றளவும் இருக்கின்றன!
உங்கள் துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள், பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திப் பேசவில்லை என நீங்கள் மழுப்பலாம். உங்கள் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள், “காமராஜருக்குக் கல்லறை கட்டியதே நாங்கள் தான்” என்று கூறவில்லை என உண்மையைத் திரிக்கலாம்.
ஆனால், இதோ முரசொலி இதழிலேயே மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் நீங்கள் காமராஜரை இழிவுபடுத்திய காட்சிகள்.
இதை உங்களால் மறுக்க முடியுமா, அல்லது இன்று நியாயப்படுத்திப் பேச முடியுமா?
ஆகவே, பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது! காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பெருந்தலைவர் காமராசர் குறித்து வலைதளங்களில் எழும் கருத்துக்கள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.