×

எத்தனை தோல்விகள் வந்தாலும் மக்களுக்காக பாடுபட்டது திமுக ஆட்சி! - கனிமொழி பெருமிதம்..!!

 
திமுக மகளிர் அணி சார்பாக ’வெல்லும் தமிழ் பெண்கள்’ என்று தேர்தலில் பணி செய்த திமுகவை சார்ந்த மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது கனிமொழி பேசுகையில், ”நம்மை சுற்றி இருந்த அத்தனை வேலிகளையும் உடைத்துக் கொண்டு, உங்களுடைய உரிமைகளுக்காக, இலக்குகளுக்காக நீங்கள் வாழ வேண்டும் என்று சொல்லித் தந்தவர் பெரியார். அதே வழியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் நிறைவேற்றி காட்டியவர் கலைஞர். ஒவ்வொரு தேர்தலிலும் வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து, வாக்கு கேட்பது திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கக்கூடிய மகளிர் அணி பெண்கள் தான்” என்றார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து பேசிய கனிமொழி, “எத்தனை தோல்விகள் வந்தாலும் சமூகத்திற்கான ஆட்சியை நடத்தி, நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று பாடுபட்ட ஆட்சி, திமுக ஆட்சி. அதனை நாம் தலை நிமிர்ந்து எப்போதும் சொல்ல முடியும்.
இந்த சமூகத்தில் பெண்கள் உள்ளடக்கிய ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும், அவர்களுக்கான திட்டங்களை செய்து தர வேண்டும் என்று சிந்தித்த ஒரு தலைவர் கலைஞர் கருணாநிதி. கலைஞரைப் பற்றிய பாராட்டுகளை காட்டிலும், விமர்சனங்கள் தான் அதிகம். நான் எதையும் எதிர்பார்க்காமல் இந்த மக்களுக்காக உழைப்பேன் என்று ஒரு தலைவன் வாழ்ந்தான் என்றால், அது கருணாநிதி தான். எது வந்தாலும், கொள்கை உறுதியோடு நின்றோம் என்றால், அதனை வெற்றி பெற்று காட்ட முடியும் என்பதை அவர் தான் எனக்கு கற்றுக் கொடுத்தார்” என புகழாரம் சூட்டினார்.
தவெக அரசை விமர்சித்த எம்.பி கனிமொழி, “தற்போது ஆட்சி மாற்றம் வந்துள்ளதாக கூறுகிறார்கள், எனக்கு ஆட்சி மாற்றத்தை பற்றி எந்த கவலையும் இல்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஒரு ஆட்சி பொறுப்பேற்றுக் கொள்கிறது என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள், ஆட்சிக்கு பொறுப்பேற்க மாட்டேன் என்று இருக்கிறார்கள். ஒரு ஹோட்டலுக்கு சென்றோம் என்றால், உங்கள் உடமைகளுக்கும் எங்கள் நிர்வாகம் பொறுப்பு இல்லை என்று எழுதிப் போட்டு இருப்பார்கள். அதே போன்றுதான் தற்போதைய புதிய ஆட்சியில் உங்கள் உடமைகளுக்கோ, பாதுகாப்புக்கோ நாங்கள் பொறுப்பல்ல என்று சொல்லக்கூடிய நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது.
இன்று மாநிலத்தில், கொலைகள், பாலியல் வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் என ஒவ்வொரு நாளும் குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் ஆட்சியில் இருந்து வெளியேறி விட்டோம், ஆனால் ஒரு தேர்தல் மனநிலையில் இருந்து வெளியே வராமல் திமுகவையே மீண்டும் மீண்டும் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
நடைபெறும் சம்பவங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்கக் கூடியவர்கள் என்பதையே மறந்துவிட்டு பேசுவதை பார்க்கும் போது, உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் நியாயமாக இருக்கவில்லை என்பது புலப்படுகிறது. அரசு செய்ய தவறிய விஷயங்களில் யார் மேல் பழி போடலாம் என்று தேடிக் கொண்டு இருந்தால், எந்த மாற்றமும் வராது. யார் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இன்று வரை தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கின்ற தலைவர் கருணாநிதி தான்” என பேசினார்.