×

"தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை" - விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி!!

 

தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்,  "கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.  கொரோனா வைரஸ் கடைசி வரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும். கொரோனா 3ஆம் அலையை  நாம் கடக்க வேண்டுமென்றால் மூன்று 'C'யை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒன்று close contact - நெருங்கிய தொடர்பு,  close space- காற்றோட்டம் இல்லாத இடம்,  Crowd- கூட்டம் கூடுவது இந்த மூன்றையும் நினைவில் கொண்டு நாம் செயல்பட்டால் கொரோனாவை  எளிதில் கடந்துவிடலாம்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மரணத்தை தவிர்க்கலாம். முதலில் வைரஸை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அதை தடுப்பதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  தற்போது நமக்கு நல்ல விழிப்புணர்வு கிடைத்து விட்டது.  அதனால் கொரோனா 3ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை.  அதேபோல் ஒமிக்ரான் 4 மடங்கு வேகமாக பரவுகிறது.  பாதிப்பு குறைவாக இருந்தாலும் தொற்று பாதிப்பு அதிகம்.  அதனால் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இதை நாம் எளிதில் கடந்துவிடலாம்" என்றார். 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினசரி கொரோனா பாதிப்பு 8ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில்  8,981 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  27லட்சத்து 76 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.