×

ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

 

ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அனுப்பிய ஷோகாஸ் நோட்டீஸ் (Show cause) சம்பவத்தில் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கேட்டுள்ளது.

 1994 முதல் 2012-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஈஷாவிற்கு ஷோகாஸ் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. இதை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 7-ம் தேதி தொடந்த வழக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த கட்டிடங்கள் ஈஷா அறக்கட்டளை நடத்தும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமானது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் 2014-ம் ஆண்டு அறிவிப்பை (notifications) தவறாக புரிந்துக்கொண்டு இந்த நோட்டீஸை அனுப்பி உள்ளது என்பது ஈஷாவின் நிலைப்பாடாகும்.

 இது தொடர்பாக ஈஷாவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “நாங்கள் பல பெரிய கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறோம். தங்கும் இட வசதியுடன் கூடிய ஐ.சி.எஸ்.இ பள்ளி, பாரம்பரிய நடனம், இசை மற்றும் யோகா போன்றவற்றை குருகுல பாரம்பரியத்தின் படி கற்றுக்கொடுக்கும் கலாச்சார பள்ளி, யோகா ஆசிரியர்களுக்கும், ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தும் பிரதான யோகா மையம் ஆகியவை இதில் அடங்கும்.  எங்களின் புரிதலின்படி, 1.5 லட்சம் சதுர மீட்டர்களுக்கு குறைவான பரப்பளவில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை. இதை நாங்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் தெரிவித்துவிட்டோம். ஆனால், துர்திருஷ்டவசமாக அவர்கள் எங்கள் கருத்தை பரிசீலிக்கவில்லை. ஆகவே, அவர்கள் அனுப்பிய நோட்டீஸிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளோம்.” என்றார்.   இந்த வழக்கு பிப்ரவரி 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.