“நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தவெகவின் நிலைப்பாடு”- நிர்மல்குமார்
திமுக - அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கட்டும் பார்க்கலாம் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “திமுக - அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கட்டும் பார்க்கலாம். ஒன்றிய அரசால் நீட் தேர்வை முறையாக நடத்த முடியாத நிலை உள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தவெகவின் நிலைப்பாடு. ஒரு தேர்வை கூட மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆகியும் தேர்வை நடத்துவதில் மத்திய அரசுக்கு முதிர்ச்சியில்லை. அவர்கள் ஆளும் மாநிலங்களில்தான் தவறு நடக்கிறது. மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்க நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் தயவு செய்து தவறான முடிவெடுக்க வேண்டாம். மத்திய அரசால் வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கக்கூட முடியவில்லை. நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பழைய முறையையே பின்பற்ற வேண்டும். பயிற்சி மையங்களுக்கு மாணவ, மாணவிகள் செல்வதற்கான வழிவகையைதான் நீட் செய்துள்ளது. திறன் மேம்பாட்டு துறை என்பதற்கு ஏற்பதான் நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.