“விஜய்க்கு மக்கள் அளிக்கும் செல்வாக்கை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது”- நிர்மல்குமார்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை விஜய் மக்கள் சந்திப்பை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், த.வெ.க துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய நிர்மல் குமார், “அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கிறோம். ஆனால் கரூரில், மதியம் வரை அனுமதி தரவில்லை. மதியத்திற்குப் பின்னர் தான் அனுமதி தந்தார்கள். மற்ற கட்சியினருக்கு அனுமதி தருகிறார்கள். ஆனால் எங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன, மக்களின் செல்வாக்கை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. மக்களுக்கு எந்த வழித்தடத்தில் தலைவர் வருகிறார் என்று சொல்ல வேண்டியிருக்கும். கடைசி நேரத்தில் தான் எங்களுக்கு இடத்தையே உறுதி செய்கிறார்கள். நாங்களும் எந்தெந்த இடையூறுகளை ஏற்படுத்துவார்கள் என்று யூகித்துக்கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் மூன்று மாதங்களுக்கு சுற்றுப்பயணம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வெற்றிப் பயணமாக இருக்கும். மக்களும் முழு அளவில் ஆதரவு தருகிறார்கள். நாளையும் வெற்றிப் பயணமாக இருக்கும்.
பாரபட்சம் பார்க்காமல் அதிகாரிகளாகச் செயல்பட வேண்டும். நேற்று முன்தினம் கூட திருச்சியில் பத்து நாட்கள் கழித்து ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் ஒரு வாரம் கழித்து இன்று ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திறந்த வழக்கு (Open FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை, சட்டப்படி சந்திப்போம்” என்றார்.