×

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு- நிர்மலா சீதாராமன்

 

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு, முன்பு இருந்த வரியே தற்போது ஜிஎஸ்டி-யிலும் உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி தொடர்பான ஒவ்வொரு தீர்மானமும் அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அனைவருடைய கருத்துக்கள் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மோடி தனியாக மக்களுக்கு வரி விதிப்பது போல் பேசப்படுகிறது. ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு, முன்பு இருந்த வரியே தற்போது ஜிஎஸ்டியிலும் உள்ளது.  ஜிஎஸ்டி வந்த பிறகு பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. 


வேங்கைவயல் சம்பவம் தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது. நாங்கள் நன்றாக முன்னேறி வருகிறோம், வடக்கில் சில மாநிலங்கள் முன்னேறவில்லை என்று சொல்கிறார்கள். அந்த மாநிலத்தில்கூட வேங்கைவயல் மாதிரியான சம்பவம் நடக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு திமுகவின் வெற்றி என்று கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்புக்கு திமுக உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேடுவதை திமுக கைவிட வேண்டும். சாதி ரீதியான பிரச்சினை தமிழகத்தில் இன்றும் உள்ளது, தமிழகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு சாதிய கொடுமைகள் தமிழகத்தில் நடைபெறுகிறது. 2014க்கு முன்பு பிரதமரும், மாவட்ட அதிகாரியும் நேரடியாக பேசிய நிகழ்வு நடந்ததே இல்லை. ஆனால், இன்று மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் இளம் அதிகாரி கூட, பிரதமருடன் நேரடியாக பேசி தன்னுடைய மாவட்டத்திற்கான நலன்களை கேட்டு வாங்கிக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் இருந்து திறமைமிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாகின்றனர்” என்றார்.